வழக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது.. பாமக இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் - ராமதாஸ்..!
பாமக எந்தக் கூட்டணியில் சேருகிறதோ அந்தக் கூட்டணி வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாமகவின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், மயிலாடுதுறைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். பாமகவில் நிகழும் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நிலையில் , அவர் என்ன பேசப்போகிறார் என கட்சியினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அப்போது பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும் என்று நேரில் அழைக்கவே இக்கூட்டத்துக்கு வந்ததாக தெரிவித்தார்.

இதனிடையே நேற்று இரவு ரமதாஸ் வெளியூர் சென்றிருந்த சமயத்தில், அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று தனது தாயை சந்தித்துப் பேசினார். தைலாபுரம் தோட்டத்துக்கு மருத்துவர் அன்புமணி சென்ற தகவலை நிர்வாகிகள் மூலம் அறிந்து கொண்ட ராமதாஸ், கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த 9 தீர்மானங்களை மட்டும் வாசித்துவிட்டுச் சென்றார். அதன்படி மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு காந்தி நடத்திய சத்தியாகிரக போராட்டத்தின் முதல் தியாகியான மாயூரம் சாமி நாகப்பபடையாட்சி பெயரை சூட்ட வேண்டும்; விரைவில் மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும்; சீர்காழியில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட வேண்டும்; என்பது உள்ளிட்ட தீர்மானங்களை மட்டும் படித்து விட்டு 5 நிமிடங்களில் சுருக்கமாக உரையை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

மயிலாடுதுறை தனியார் ஹோட்டலில் தங்கிய அவர், இன்று காலை பூம்புகாரில் நடைபெறும் வன்னியர் மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பா.ம.க. எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்; எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது; ஆனால் முதல் எழுத்தை இனிசியலுக்காக பயன்படுத்தலாம்.
பிரதமர் எனது நண்பர், நிதியை கேட்டு வாங்குவோம். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி தர தொடர்ந்து வலியுறுத்துவோம்.” என்றார். மேலும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என ராமதாஸ் பதில் அளித்துள்ளார். மேலும், கோயில் நிதியில் கல்விக்காக கல்லூரி கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது, அதில் தவறு எதுவும் இல்லையே என்றும் தெரிவித்துள்ளார்.


