'சண்டாளன்’ விவகாரம்.. சீமான் மீதான வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம்!

 
seeman

 விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின்போது, பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க, விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  

அண்மையில் நடந்துமுடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது கருணாநிதியை விமர்சிப்பதற்காக ‘சண்டாளன்’ என்கிற வேறு ஒரு சமூக பெயரஜி சீமான் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் சம்பந்தப்பட்ட சமூகத்தினரை அவர் இழிவுபடுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

Seeman

ஆவடி பட்டாபிராமை அடுத்த தண்டுரை வள்ளலார் நகரைச் சேர்ந்த அஜேஷ் என்பவர், சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார், ஆனால் இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தனது புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு பட்டாபிராம் காவலர்களுக்கு உத்தரவிடுமாறு, சென்னையில் உள்ள மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் மனு அளித்திருக்கிறார். 

இந்த புகாரின் அடிப்படையில், மனுதாரரின் புகாரின்பேரில் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க , விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.