3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைப்பு

 
முதல்

தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

Image

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் ஆலயம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம், கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணிஅம்மன் ஆலயம் உள்ளிட்டவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராசன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். நாள் முழுவதும் அன்னதானம் என்ற திட்டத்தின் படி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆண்டொன்றுக்கு 9,25,600 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும், மூன்று கோடியே 65 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் தற்பொழுது இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ள சூழலில் 5ஆயிரம் பக்தர்கள் பயனடைவார்கள் எனவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 1500 பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் இனி வரும் காலங்களில் 2800 பக்தர்கள் பயனடைவார்கள் எனவும், திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் 500 பக்தர்கள் பயனடைந்து வந்த சூழலில் இனி 1800 பக்தர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.