குட் நியூஸ் சொன்ன முதல்வர் : விடுபட்ட மகளிர்க்கும் நிச்சயம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்..!
தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பனின் இல்லத் திருமண விழா, பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மோளையானூரில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் எழில்மறவன் - கிருத்திகா ஆகியோரின் திருமணத்தை அவர் நடத்தி வைத்தார். அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பெருந்திரளானோர் முன்னிலையில் இந்த மணவிழா கோலாகலமாக அரங்கேறியது.
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசுத் திட்டப்பணிகள், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் ஆய்வுக் கூட்டங்களுக்கு மத்தியில், கழகக் குடும்பங்களின் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தனக்கு மனதிற்குப் பெரும் ஆறுதலையும் ‘ரிலாக்ஸ்’ உணர்வையும் தருவதாகக் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோதும், சட்டமன்றத்தில் மிகுந்த கண்ணியத்தோடும், ஜனநாயக முறையிலும் பதிலளித்தவர் என்று அவரைப் பாராட்டிப் பேசினார்.
அரசுத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், சென்னையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மாநாடு மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்ததைச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் இதுவரை மொத்தம் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாகவும், தகுதியுள்ள மற்ற விடுபட்ட மகளிருக்கும் இந்த உதவித்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, ஜி.டி.பி. (GDP) வளர்ச்சியில் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளதை முதல்வர் பெருமையுடன் குறிப்பிட்டார். எத்தனையோ சோதனைகள் வந்தபோதும், அவற்றை முறியடித்து திராவிட மாடல் ஆட்சி சாதனைகளைப் படைத்து வருவதாகவும், மக்கள் நலனுக்காக அரசு நிர்வாகம் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, தேர்தல் பணிகள் குறித்துப் பேசிய முதல்வர், வாக்குரிமையைக் காப்பாற்ற தேர்தல் பணிகளில் கட்சி நிர்வாகிகள் விழிப்போடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்றும், வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக திமுக ஆட்சியை அமைக்க அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.


