மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் - சென்னை மாநகராட்சிக்கு தலைமை செயலாளர் உத்தரவு..

 
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் - சென்னை மாநகராட்சிக்கு தலைமை செயலாளர் உத்தரவு..


வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

பருவமழை காலங்களின் போது குடியிருப்பு பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழை நீர் தேங்கி,  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த வருடம் பருவமழைக்கு முன்னதாக குறிப்பிட்ட அளவிலான பணிகள் என்பது முழுமையாக நிறைவு பெற்றதால்,   அப்போது பல இடங்களில் மழைநீர் தேங்குவது என்பது தவிர்க்கப்பட்டது. இந்தச் சூழலில் மீதம் இருக்கக்கூடிய இடங்களில் வடகிழக்கு பருவமழைக்கு காலத்திற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடித்து விட வேண்டும் என்கிற அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சுமார்  ரூ.1,491 கோடி மதிப்பீட்டில் 171 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணியும்,  பேரிடர் மேலாண்மை விதியின் கீழ் ரூ. 230 கோடி  மதிப்பீட்டில் வடிகால்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி

 இந்த குறிப்பிட்ட மழைநீர் வடிகால்கள் கட்டமைக்கும் பணிகளை வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள், அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே  முடித்து விட வேண்டும் என்று அனைத்து சென்னை மாநகர அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் மாலையில் இதுகுறித்த  ஆய்வு கூட்டம்  நடைப்பெற்றது. அதில் சென்னை மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நிர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். இந்த ஆய்வு கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது,    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது  குறித்து  ஆலோசிக்கப்பட்டது. மேலும்,  பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக  மழை நீர் வடிகால் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

மழைநீர்

 ஏற்கனவே முடிக்கப்பட்ட மழை நீர் வடிகால்களில் மழைநீர் சீராக செல்லும் வகையில் அவற்றை தூர்வாருதல் மற்றும் நீர்நிலைகள்,  கால்வாய்களை தூர்வாருதல் போன்ற  பணிகளையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தற்போது பணிகள் நடைபெற்று வரக்கூடிய இடங்களில் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படா வண்ணம் தடுப்புகள் அமைப்பது,. எச்சரிக்கை பலகைகள் வைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் அவ்வப்போது புகார்களை எழுப்பி வரும் சூழலில், தாமதம் ஏதுமின்றி மழைக் காலத்திற்கு முன்பாகவே வடிகால் அமைக்கும் பணிகள்,  தூர்வாரும் பணிகளை முடித்திட வேண்டும் என்றும்,  மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்காத சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.