மாப்பிள்ளை எடப்பாடிதான் வேட்டியும் சட்டையும் பாஜக கொடுத்தது! அதிமுக கூட்டணியின் முரண்பாடுகளும் திமுகவின் முன்னெடுப்புகளும்!

 
சஃப் சஃப்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்  களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து, திமுக அமைத்த வலுவான கூட்டணியுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இறுதிக்கட்டத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அதிமுகவும் பாஜகவும் தங்களது கூட்டணிக்குள் பிற கட்சிகளை இணைக்கக் கடுமையாக முயன்று வருகின்றன.

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை நாளை தொடக்கம்

தேர்தல் வியூகம் வகுக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய திமுக, தேர்தல் பணியை முடுக்கிவிடும் வகையில் நான்கு முக்கிய முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. திமுக ஆட்சியில் இதுவரை பெண்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்திய திட்டங்களையும் அதனால் நிகழ்ந்த சாதனைகளையும் சொல்லி பெண்களின் ஓட்டுகளை மொத்தமாக வாரி சுருட்டும் வகையில் மகளிர் அணியை வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யக் களமிறக்கப் போகிறார்கள். இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைப் பரப்புரைக் கூட்டங்கள் மைக் டெஸ்டிங் ஒன்... டூ... த்ரி என ஒலிக்கப் போகின்றன.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்துத் தேர்தல் பணிகளை 6 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது திமுக. ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் ஆகியோருக்கான பயிற்சி மாநாடுகளில் பட்டையைக் கிளப்பத் தயாராகிவிட்டது. வெற்றி வாக்குச்சாவடி பயிற்சியில் மட்டும் 7.5 இலட்சம் பேர் பங்கேற்கப் போகிறார்கள். பொதுவாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிகளைத்தான் தேர்தல் ஆணையம் நடத்தும். வாக்குப்பதிவு நாளில் முகவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் எனத் தொகுதி வாரியாக ஒரு விளக்கக் கூட்டத்தை மட்டுமே கட்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால், பயிற்சி மாநாடு என்றெல்லாம் புதிய முயற்சியை எடுத்தது திமுகவாகத்தான் இருக்கும்.  இந்த ஓட்டங்கள் எல்லாம் மார்ச் 8-ஆம் தேதி திருச்சியில் உச்சக் கட்டத்தைத் தொடும். அன்றைக்கு 10 இலட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களைத் திரட்டி தேர்தல் சிறப்பு மாநில மாநாட்டை நடத்தப் போகிறார்கள். ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதுதான்  திமுகவின் கருப்பொருள். ஆனால், அதிமுகவோ கூட்டணியை இறுதி செய்வதிலேயே போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுகவோ ரத கஜத் துரகப் பதாதிகள் சேனைகளோடு தேர்தல் களத்திற்கே வந்துவிட்டது. தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு பிரசாரம் மட்டும்தான் திமுகவிடம் இருக்கும் பாக்கி விஷயங்கள்.

ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்.. விரைவில் அறிவிப்பு! DMK  Alliance protest against bjp

அதிமுக மற்றும் தவெக எதிர்க் கட்சிகள் கூட்டணியையே இறுதி செய்ய முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் சூழல் அந்தக் கட்சிகளுக்குப் பலவீனத்தையே காட்டுகின்றன. அந்தக் கூட்டணிகளில் எந்தக் கட்சிகள் எல்லாம் இடம்பெறும் என்பது குழப்பமாகவே பார்க்கப்படுகின்றன. திமுக கூட்டணியைப் பொருத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பிரதானக் கட்சிகளுடன் சேர்த்து 21 கட்சிகளை உள்ளடக்கிய வலுவான கூட்டணியாக திமுக அணி இருக்கிறது. இந்தக் கூட்டணியை இன்னும் வலுவாக்க அறிவாலயம் முயன்று கொண்டிருக்கிறது. புதிதாகச் சில கட்சிகளைச் சேர்க்கும் சூழல் நிலவுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி 10 தேர்தல்களில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் திமுக கூட்டணி தோல்வியையே சந்திக்காத அணி என்ற இமேஜ் இருக்கிறது.

அதிமுகவோ 2021 சட்டமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணியையே மீண்டும் அமைக்க முயன்று வருகிறது.  2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்து விட்டு, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வலைவீசினார் எடப்பாடி பழனிசாமி, அந்த முயற்சியும் தேர்தல் முடிவுகளும் படுதோல்வியிலேயே முடிந்தன. வேறு வழியின்றிச் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுக்கு முன்பே பாஜகவுடன் கரம் கோத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகினார். ‘’மாபெரும் கூட்டணி அமையும்; பிரமாண்டக் கட்சி வரப் போகிறது; திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் பிரிந்து அதிமுக அணியில் சேரப் போகின்றன; பிள்ளையா சுழி போட்டாச்சு; கொடி பறக்குது’’ என எந்தெந்த வார்த்தைகளில் எல்லாம் சொல்ல முடியுமோ, அத்தனை அஸ்திரங்களையும் எடப்பாடி பழனிசாமி பிரயோகித்தும் கூட்டணிக்கு புதிதாக எந்தக் கட்சியும் வரவில்லை.

AIADMK Issue OPS Supporters 18 Members Including Ravindranath OPS Sacked  From AIADMK Party Edappadi Palanisamy

எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைக்கத் தடுமாறி வந்தார். அதனால்தான் பாஜகவே நேரடியாகவே இறங்கி, கூட்டணி அமைக்கும் வேலையில் இறங்கிவிட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்குவதாகத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூறிவந்தாலும் கூட்டணி முடிவுகளை பாஜகவே எடுத்து வருகிறது. சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயிலைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை இணைத்தார் டி.டி.வி.தினகரன். கூட்டணிக்குத் தலைமை எனக் கூறும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே தினகரன் - பியூஷ் கோயல் இடையே கூட்டணி முடிவாகியிருப்பது விநோதம். மாப்பிள்ளை எடப்பாடி பழனிசாமிதான். அவருடைய வேட்டியும் சட்டையும் பாஜக கொடுத்தது.

தினகரன் - பியூஷ் கோயல் சந்திப்பு நடப்பதற்கு 43 நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுகவின் பொதுக்குழுவைத் திரும்பிப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. 2025 டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ’சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, அதிமுக தலைமை தாங்குகிறது! அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது’ எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த அதிகாரம் பழனிசாமிக்கு இல்லை என்பதையே தினகரன் - பியூஷ் கோயல் சந்திப்பு உறுதி செய்துவிட்டது.

ஒருபுறம் கூட்டணி ஆட்சி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பேசிவர, எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரப் பயணங்களில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று முரண்படுகிறார். கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷாவின் வாய்ஸைதான் பியூஷ் கோயல் முன்னிலையில் செய்தியாளர்களிடம் சொன்னார் தினகரன். இப்படியான முரண்பாடுகள், தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

TTV Dhinakaran meets Union Minister Piyush Goyal as AMMK rejoins NDA

கடந்த காலங்களில் தங்களது கூட்டணியில் இருந்த கட்சிகளை மீண்டும் இணைப்பது, விஜய்யின் தவெக பக்கம் அவர்கள் சாய்ந்து விடாமல் தடுப்பது என டெல்லியின் டாப் அசைன்மெண்ட்டை செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது பாஜக. இதன் தொடக்கமாகத்தான் அன்புமணியின் தலைமையிலான பாமகவை அதிமுக கூட்டணிக்குள் இழுத்து வந்தது. ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நடக்கும் போரால் பாமகவின் வாக்கு வங்கி செங்குத்தாக பிளவுபட்டிருக்கிறது. அதனால், வன்னியர்கள் வாக்கு அப்படியே அதிமுக கூட்டணி அள்ளிக் கொண்டு போகும் என்பது எல்லாம் கனவாகத்தான் இருக்கும்.

கடந்த சில மாதங்களாக ’’எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் தினகரன். அந்தத் தினகரன் கூட்டணியில் சேரும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. டிடிவியும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்தும் முதல்வர் வேட்பாளர் பற்றியும் எதுவும் பேசவில்லை. தவெக-வை ஆதரித்து கருத்துகள் சொல்லி அந்தக் கூட்டணியில் இணையும் முடிவில் இருந்தார் தினகரன். தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனும், அமமுக கூட்டணிக்கு வரும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில்தான் தினகரனை திடீரெனத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தற்கான காரணம் முக்கியத்துவம் பெறுகிறது. தினகரன் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளைச் சுட்டிக்காட்டி, பாஜக கொடுத்த நிர்ப்பந்தம்தான் வேறு வழியில்லாமல் கூட்டணியில் சேரும் முடிவைத் தினகரன் எடுத்திருக்கலாம். இவையெல்லாம் அதிமுக கூட்டணியின் உரசல்களை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

கடந்த தேர்தல்களில் அமமுக பிரித்த வாக்குகளை டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் ஈர்த்துவிடலாம் எனக் கணக்குப் போடுகின்றது பாஜக. ஆனால், அமமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்தே வந்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 5.27 சதவிகிதமும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 2.35 சதவிகிதமும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 0.90 சதவிகிதமும் என இறங்குமுகமாக மாறியது. இந்த வாக்குகள் கூடக் சமுதாய ரீதியாக எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக விழுந்த வாக்குகள்தான். எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் கூட்டணி வைத்ததால் இந்த வாக்குகளும் மேலும் குறையவே அதிக வாய்ப்புள்ளது.

பொதுவாகத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆளும் கட்சியின் மீது வெளிப்படும் எதிர்ப்பலையே, எதிர்க்கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும். ஆனால், திமுக ஆட்சியின் மீது அத்தகைய எதிர்ப்பலை பெரிதாக இல்லை, ஊடக கருத்துக் கணிப்புகளும் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை கருத்துக் கணிப்புகளும் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் தீவிரமாகத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள திமுகவை ஒப்பிடுகையில் அதிமுக இன்னும் குழப்பத்திலேயே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் ரேஸில் அதிமுக முதலடியை எடுத்து வைப்பதற்கு முன்பே பல ஆயிரம் அடிகளை முன்னோக்கி திமுக வெற்றிக் கோட்டை தொடப் பாய்ந்து  கொண்டிருக்கிறது.