கூடவே இருந்து தேடுவது போல் நாடகம் ஆடிய குற்றவாளி..! கோவை சிறுமி கொலை வழக்கில் அம்பலமான பகீர் பின்னணி!

 
1

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, இஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கோவை டிஐஜி, டிஎஸ்பி ஆகியோருடன் இணைந்து கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி கூட்டாக செய்தியர்களிடம் பேசினர்.

ஐஜி ரம்யா பாரதி கூறியதாவது:கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21-ஆம் தேதி இரவு சிறுமி திடீரென காணாமல் போனதாகப் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில் உடனடியாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த சுமார் 250 சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இந்த கொடூர கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபர், அச்சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறி நயமாகப் பேசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், சிறுமி காணாமல் போன போது எதுவும் தெரியாதது போல குற்றவாளி கார்த்தியும் சேர்ந்து சிறுமியை தேடும் நாடகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட முதன்மை குற்றவாளியான கார்த்தி மற்றும் இந்த மனிதாபிமானமற்ற குற்ற செயலுக்கு துணையாகவும் உடந்தையாகவும் செயல்பட்ட மோகன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி மற்றும் மோகன் ஆகிய இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் போக்சோ (POCSO) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கூறுகையில், "வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்யும்; கொடூரக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறை தரப்பில் அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.