ஆவினால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயர்.. முதலில் இதை செய்யுங்க - பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை..

 
ஆவின் பால்

ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விநியோகத்தில் காலதாமதம், தட்டுப்பாடு, அதனால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை  தடுக்க ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளுக்கு ஆவினுக்கான பால் கொள்முதல் கடும் வீழ்ச்சியை சந்தித்தது ஒரு காரணம் என்றால் பால் பண்ணைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வராமல் நடைபெறும் முறைகேடுகளும் பிரதான காரணமாகும்.

பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

குறிப்பாக 2020ம் ஆண்டுக்கு முன்பு வரை 25ஒன்றியங்கள் மற்றும் இணையங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் பணியாற்ற தினக்கூலி அடிப்படையில், ஆவினின் நேரடி கட்டுப்பாட்டில் தற்காலிக தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக இயக்குனராக இருந்த வள்ளலார் ஐஏஎஸ் அவர்கள் ஆட்சியாளர்களின் பினாமிகள் நடத்துகின்ற ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுவனங்களுக்கு சாதகமாக கொரோனா காலகட்டத்தில் ஆகஸ்ட் 2020ல் தற்காலிக தொழிலாளர்கள் முறையை ரத்து செய்து விட்டு, ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை கொண்டு வந்ததின் விளைவு தான் தற்போது அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் ஏற்படும் பால் உற்பத்தி மற்றும் விநியோக பிரச்சினைகளுக்கு மூலக் காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

ஏனெனில் ஆவினுடைய நேரடி கட்டுப்பாட்டில் தற்காலிக தொழிலாளர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட வரை அதில் பெரும்பாலும் முறைகேடுகள் செய்ய வாய்ப்பில்லாமல் இருந்ததால் ஆவின் ஊழல் அதிகாரிகளின் அகோர பணப்பசிக்கு இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் முறை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  விளைவு உதாரணமாக பால் பண்ணைக்கு ஒரு ஷிப்டிற்கு 50தொழிலாளர்கள் பணிக்கு வரவேண்டும் (ஒருநாளைக்கு 3ஷிப்ட்) என்றால் 25முதல் 30பேர் வரை மட்டுமே பணிக்கு வருவது, ஆனால் ஒவ்வொரு ஷிப்டிலும் 100% முழுமையான தொழிலாளர்கள் பணிக்கு வந்தது போல் கணக்கு காட்டி, குறைவாக வரக்கூடிய தொழிலாளர்களுக்குரிய ஊதியத்தையும் ஆவினில் இருந்து ஒப்பந்ததாரர் பெற்றுக் கொண்டு, அதிலும் தொழிலாளர்களுக்கு 60% மட்டுமே ஊதியமாக வழங்குவது, அதிலும் குறைவான ஊதியம் வழங்குவதற்காக 18வயதுக்குட்பட்ட இளம் சிறார்கள், 15வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அனுப்புவது உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருக்க "ஆவின் அதிகாரிகளுக்கு முறையாக கவனிப்பு" செய்து விட ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுவனங்களின் உரிமையாளர்களும், ஆவின் ஊழல் அதிகாரிகளும் கோடிகளில் குளித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆவினால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயர்.. முதலில் இதை செய்யுங்க - பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை..

மேலும் இவர்களின் எழுதப்படாத முறைகேடு உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்காத நேர்மையான அதிகாரிகளை தாக்குவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட அராஜகங்களிலும் ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதும், ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஒப்பந்த நிறுவனங்கள் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஆவின் நிர்வாகம் தவிர்த்து வருவதாலும் ஆவினில் முறைகேடுகளும், பால் பண்ணைகளில் பணிகள் தாமதமும் தொடர்கதையாகவே இருக்கிறது.

எனவே பால் பண்ணைகளில் உற்பத்தி பணிகளிலும், அதனைத் தொடர்ந்து பால் பாக்கெட்டுகள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படுவதை தடுத்து, அரசுக்கு அவப்பெயர் வராமல் தடுக்கப்பட வேண்டுமானால் தற்போதுள்ள 27ஒன்றியங்களிலும் மற்றும் இணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பால் பண்ணைகளில் தற்போதுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் நடைமுறையை உடனடியாக ரத்து செய்து விட்டு, ஏற்கனவே இருந்த தினக்கூலி அடிப்படையிலான தற்காலிக தொழிலாளர்கள் முறையை அமுல்படுத்தி, அதற்கான பணியாளர்களை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.