நிற்க முடியாமல் குச்சியை பிடித்து அமர்ந்த நோயாளி... அசால்ட்டாக போனில் பேசிக்கொண்டிருந்த மருத்துவர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியை அமர வைத்து விட்டு செல்போனில்மருத்துவர் உரையாடி கொண்டிருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தீவிர சிகிச்சை பிரிவு, பல் மருத்துவம், பொது மருத்துவ பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது.பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், விசைத்தறி தொழிலாளர்கள் உட்பட பலரும் தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி பல் தொடர்பான சிகிச்சைக்கு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை பல் சிகிச்சை மருத்துவரை அணுகிய போது அந்த மருத்துவர் நீண்ட நேரம் செல்போனில் உரையாடிக் கொண்டிருப்பதும் அந்த வயதான பெண்மணி ஏக்கத்துடன் அமர்ந்திருப்பது போல் ஒரு வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் வலைதளங்களில் தங்கள் சார்பில் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த வீடியோ குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட பொழுது, அந்தப் பெண்மணி சிகிச்சைக்கு வரும்பொழுது அனுமதி சீட்டு (OP) சீட் வாங்காமல் பல் மருத்துவரை அணுகியுள்ளார். அந்த வயதான பெண்மணிக்கு மருத்துவ நிர்வாகம் சார்பில் அங்குள்ள ஒரு பணிப்பெண் (OP) சீட் வாங்கி வருவதற்கு சென்ற பொழுது அந்தப் பெண்மணி அமர்ந்திருக்கும் பொழுதுதான் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவத்துறை நிர்வாக காரணமாகவே மருத்துவர் போனில் பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது