மழையில் அறுத்து விழுந்த மின் கம்பியை மிதித்து துடிதுடித்து உயிரிழந்த நாய்கள்

 
நாய்கள்

கடலூரில் மழையில் அறுத்து விழுந்த மின் கம்பியை மிதித்து நாய்கள் துடிதுடித்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடகிழக்கு பருவமழை நாளை முதல் துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடலூர் கோண்டூர், பாப்பம்மாள் நகர் பகுதியில் காலை ஐந்து முப்பது மணி அளவில் மின் கம்பி அறுந்து தெருவில் விழுந்துள்ளது. இதனை அங்குள்ள நபர் பார்த்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மின்சார துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அங்கேயே சாலையில் அமர்ந்து அப்பகுதியில் யாரும் வராத வண்ணம் அவர் தடுத்துள்ளார். 


தெருவில் உள்ள மக்களுக்கும் அவர் செல்போன் மூலம் தகவல் கொடுத்து யாரும் தெருவுக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனால் மின் ஊழியர்கள் வருவதற்கு தாமதமான நிலையில் மின் ஒயர் விழுந்த இடத்திற்கு சென்ற நாய் ஒன்று மின்சார கம்பியில் அடிபட்டு உயிரிழந்தது. அதனைப் பார்த்த மற்ற இரண்டு நாய்கள் அங்கு செல்ல அவையும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றன. இந்த பரபரப்பு சம்பவத்தை அங்கு இருந்தவர் வீடியோவாக பதிவு செய்துள்ள நிலையில் தாமதமாக வந்த மின்சார ஊழியர்கள் அதன்பிறகு மின்சாரத்தை நிறுத்தி மின்கம்பியை சரி செய்துள்ளனர். உடனடியாக மின்சார ஊழியர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்து இருந்தால் இந்த மூன்று நாய்கள் காப்பாற்ற பட்டு இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாய்கள் துடிதுடித்து உயிரிழக்கும் வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.