வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்ட கதவு.. சடலமாகக் கிடந்த மகள்! தலைமறைவான தந்தை - சேலத்தில் நடந்த பகீர் சம்பவம்!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் வர்ஷினி (22). இவர் சேலம் அருகே உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். சேலம் நாயக்கன்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தோழியுடன் தங்கிப் பயின்று வந்தார். நேற்று முன்தினம் ஊருக்குச் சென்றிருந்த தோழி அட்சயா மீண்டும் அறைக்குத் திரும்பியபோது, கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வர்ஷினி படுக்கையில் சடலமாகத் தேறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வர்ஷினி, நெல்லையைச் சேர்ந்த 40 வயதுடைய, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான சித்தா மருத்துவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனை வர்ஷினியின் தந்தை வரதராஜன் கடுமையாக எதிர்த்துள்ளார். புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்குச் சென்றபோதும் இது தொடர்பாக வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வர்ஷினியின் தந்தை வரதராஜன் சேலத்திற்கு வந்து மகளின் அறையில் தங்கிவிட்டுச் சென்றுள்ளார். அவர் சென்ற பிறகுதான் வர்ஷினி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது வரதராஜனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவர் நெல்லையில் உள்ள வீட்டிற்கும் செல்லவில்லை.
மாணவியின் உடலில் வெளிப்படையான காயங்கள் ஏதுமில்லை, ஆனால் கைகள் நீல நிறமாகக் காணப்படுகின்றன. கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், தந்தை தனது மகளை விஷம் கொடுத்துக் கொன்றாரா அல்லது தலையணையால் அமுக்கிக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். வர்ஷினியின் தாயிடம் நடத்திய விசாரணையில், அவரது கணவர் தனக்கு போன் செய்து "மகளைத் தாக்கியதாக" கூறியதாகத் தெரிவித்துள்ளார். இது கௌரவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.தற்போது வர்ஷினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள தந்தை வரதராஜனைப் பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லைக்கு விரைந்துள்ளனர்.


