"என் ஏரியால கடை வச்சிருந்தா கடன் கொடுக்கணும்"... கையில் கத்தியோடு கடைக்காரரை தாக்கிய போதை ஆசாமிகள்
கையில் கத்தியுடன் பெட்டிக்கடைக்காரரை தாக்கி மிரட்டிய போதை ஆசாமிகளின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பகுதியில் 'தொத்தன் மகன் சாவடி' யைச் சேர்ந்த முருகேசன் அங்கு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அதே ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்த ராஜா கனி என்பவரின் மகன் அல்பான் மற்றும் அவருடைய கூட்டாளி இருவரும் அவரிடம் வந்து கடன் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர் கடன் கொடுக்க மறுத்ததால் கஞ்சா மற்றும் மது அருந்தி தலைக்கேறிய போதையில் இருந்த அவர்கள் இருவரும் வியாபாரி முருகேசன் தனியாக கடையில் இருக்கும் போது, கையில் கத்தியுடன் வந்து தகராறு செய்து அவரை தாக்கி கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பழங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து அவர் மீது வீசி தாக்கி ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஏர்வாடி தர்கா பகுதியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் சிறு,குறு கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் கஞ்சா பெருமளவு அந்த பகுதியில் புழங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால், போதையில் இருக்கும் ஆசாமிகள் இரவு நேரத்தில் வந்து, கடன் கேட்டும் மற்றும் பணம் கேட்டும் இதுபோன்று வியாபாரிகளை தாக்கி தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக அந்த பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில், இந்த விவகாரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி கவனம் செலுத்தி போதை ஆசாமிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


