நாளை காலை 11 மணிக்கு தேர்தல்.. நெல்லை மாநகராட்சி மேயர் திமுக வேட்பாளர் அறிவிப்பு..

 
Nellai Corporation Nellai Corporation

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் அண்மையில் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி  மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக கவுன்சிலர்களே இருந்து வருகின்றனர்.  இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, கடந்த ஜூலை 8ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினர். பின்னர் அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

Nellai Mayor Ramakrishnan

பின்னர் மேயர் பதவி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, நெல்லை மாநகராட்சி ஆணையர் கடிதம் அனுப்பினார். தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை ( ஆகஸ்ட் 5) நடைபெறுமென மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார்.  இதனிடையே நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், இன்று மேயர் வேட்பாளர் குறித்து நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.  

அதன்பின்னர் நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 11 மணிக்கு மறைமுக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். இதனைத்தொடர்ந்து அவர் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படலாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.