ஆள் அடையாளமே தெரியாமல் போன பிரபல வில்லன் நடிகர்..!
1978ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பிராணம் காரீடு’ என்கிற திரைப்படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானவர கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழில் இவர் முதலில் அறிமுகமானது ‘சாமி’ திரைப்படத்தின் மூலம் தான். இந்த படத்தில் பெருமாள் பிச்சை என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழில் அவர் ‘திருப்பாச்சி’, ‘குத்து’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ போன்ற பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இதில் ‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் இவர் நடித்த சனியன் சகட கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குணச்சித்திர நடிகர், துணை நடிகர், சிறந்த வில்லன் என பல பிரிவுகளில் 9 நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2015 ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
தெலுங்கு திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் தனி இடத்தை பிடித்த கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு சில காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணமாக தற்போது அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. இதனால் படங்களில் நடிக்காமல் ஒரு திரையுலகில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு தெலுங்கு படமான ‘ஸ்வர்ணசுந்தரி’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தில் கோட்டா ஸ்ரீனிவாஸ் மிகவும் உடல் நலிந்த நிலையில் காணப்படுகிறார். கால்களில் புண்களுடன் கட்டுப்போட்ட நிலையில் காணப்படுகிறார். அவர் விரைவில் உடல்நிலை குணமடைந்து வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.



