முதல்வர் தலைமையில் நடைபெற்ற லோக் ஆயுக்தா கூட்டம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பு என்பது ஒரு ஊழல் தடுப்பு ஆணையமாகும். இது அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. ஒரு தலைவர், 2 நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள், 2 நீதித்துறை சாராத உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். அதன்படி தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம் இருந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். நீதித் துறை சாரா உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் வி.ராமராஜ், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் இருந்து வருகின்றனர்.

இந்ந்லையில் மேலும் ஒரு நீதித்துறை சார்ந்த உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. அந்த இடத்திற்கான உறுப்பினரை தேர்வு செய்வது தொடர்பான குழுவை அமைக்க , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் ஒன்றை இன்று நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர் பி.ராஜமாணிக்கம், மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


