"கேப்டனுக்கும் கலைஞருக்குமான அன்பும், நட்பும் மிக ஆழமானது" - பிரேமலதா..!!
“கலைஞர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது”என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் செம்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் 102 பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள், போட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. தலைவர்கள் பலரும் கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தும், புகழாரம் சூட்டியும் வருகின்றனர். அந்தவகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டனுக்கும் கலைஞருக்குமான அன்பும், நட்பும் மிக ஆழமானது என்று தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள பிரேமலதா, “இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


