"அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி!" - முதலமைச்சர் விஜய்யின் அணுகுமுறைக்கு திருமாவளவன் புகழாரம்..!

 
1

அரசியல் கட்சிகளின் தலைவர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதை விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் விஜய்யின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சிபிஐயும் முதலமைச்சரின் செயலை பாராட்டியுள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ”திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலையில் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச முடியாத நிலையை மாற்றி, தமிழக பண்பாட்டையும், மரபையும் மீட்கும் வகையில் அனைத்து கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர் விஜய் சந்தித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.