வந்தாச்சு புது ரூல்ஸ்..! இனி ரயிலில் அதிக சத்தமாக ரீல்ஸ் பார்த்தால்...

 
1 1

இந்தியன் ரயில்வே பல்வேறு வசதிகளை கொண்டு வருகிறது. அதே நேரத்தில், ரயில்களில் பயணிக்கும்போதுசில விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிகக வேண்டும். இல்லையெனில் அபராதம் போன்றவற்றையும்  நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

இந்திய ரயில்வே தனது பயணிகளின் இரவு நேரப் பயணத்தை மேம்படுத்தவும், அமைதியான உறக்கத்தை உறுதி செய்யவும் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, இரவு 10 மணிக்குப் பிறகு ரயில்களில் மொபைல் போன்களில் சத்தமாக வீடியோக்கள் பார்ப்பது அல்லது 'ரீல்ஸ்' கேட்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சக பயணிகளின் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஹெட்ஃபோன்கள் இன்றி பாடல்கள் கேட்பதோ அல்லது தொலைபேசியில் உரக்கப் பேசுவதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.

பயணிகளின் ஓய்வு நேரத்தைக் கருத்தில் கொண்டு, இரவு 10 மணிக்கு மேல் பெட்டியில் உள்ள பிரதான விளக்குகள் அனைத்தையும் அணைக்க வேண்டும்; மிகத் தேவையான போது மட்டும் இரவு விளக்குகளைப் (Night Lamps) பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் குழுவாகப் பயணம் செய்யும் பயணிகள், இரவு நேரத்தில் மற்றவர்களுக்குத் தொந்தரவு தரும் வகையில் உரையாடல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடுவரிசைப் படுக்கை (Middle Berth) கொண்ட பயணி உறங்கச் சென்றால், கீழ் படுக்கையில் இருப்பவர்கள் அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைக்க வேண்டும்.

ரயில்வே துறையின் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையின் கீழ், இரவு 10 மணிக்குப் பிறகு ரயில்களில் உணவு விநியோகம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களுக்குத் தேவையான உணவுகளை அந்த நேரத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதிகள் ஸ்லீப்பர், ஏசி பெட்டிகள் மற்றும் சாதாரண பெட்டிகள் என அனைத்து வகுப்புப் பயணிகளுக்கும் பொதுவானது என இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

சக பயணிகளுக்கு அசௌகரியம் விளைவிக்கும் வகையில் இந்த விதிகளை மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 145-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலில் ஈடுபடும் பயணிகளுக்குச் சூழலைப் பொறுத்து ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் அமைதியைப் பேணவும், பாதுகாப்பான மற்றும் நிம்மதியான பயணத்தை உறுதி செய்யவும் ரயில்வே போலீஸார் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவர்.