நீண்டகாலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க நடவடிக்கை தேவை!!

 
TTV

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சிறைவாசிகளின் விடுதலைக்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

TTV Dhinakaran

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் அவர்கள் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.



அரசின் பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்ததுடன் தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் கொடுத்து 49 சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதோடு, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.ஆதிநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.