"மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

 
yn

ஒடிசா ரயில் விபத்து மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஒடிசாவில் பாலசோரில் நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது.  இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 10 முதல் 12 பெட்டிகள் தரம் புரண்டதால் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. அதைத் தொடர்ந்து பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இந்த ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளும் தடம் புரண்டன.

tn

 இதைத்தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.  ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனுடன் காணொளி வாயிலாக கள நிலவரம் குறித்து அவர் உரையாடினார்.  இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் , உயிரிழந்தவர்கள் உடல்களைக் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்றார்.



இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும். இன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.  விபத்து குறித்த தகவல்களைப் பெற 1070, 94458 69843, 94458 69848 (வாட்சாப்) ஆகிய உதவி எண்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

மாண்புமிகு அமைச்சர்கள் திரு. உதயநிதி ஸ்டாலின் , திரு. சிவசங்கர்  மற்றும் உயர் அலுவலர்கள் உடனடியாக ஒடிசா சென்று, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலையை அறிந்து, மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த உள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், தீவிர காயமுற்றோருக்கு 1 இலட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார்.