"இதுவரைக்கும் ரூ.1 கோடி வரை கொடுத்திருப்பேன்"! யாசகத்தை ஆட்சியரிடம் வழங்கிய முதியவர்

 
ட்

யாசகம் பெற்ற ரூ.10000 பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சேர்த்து விடுமாறு கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் வழங்கிய முதியவரின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதியவர் ஒருவர் கையில் 500 ரூபாய் நோட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம் விவரம் கேட்கவே, அவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பூல் பாண்டியன் என்றும், தான் கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல பகுதிகளில் யாசகம் பெற்று பிழைத்து வந்ததாகவும், தான் யாசகமாக பெறப்படும் பணத்தை ஒவ்வொரு வருடமும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வந்ததாகவும், இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக பெங்களூரில் யாசகம் பெற்று வந்த தான், அங்கிருந்து தற்போது பெங்களூர் அருகாமையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தான் யாசகமாக பெற்ற பணம் ரூபாய் 10 ஆயிரத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார். 

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அவரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.கே.எம்.சரயு-விடம் அழைத்துச் சென்றனர். அப்போது தான் யாசகமாக பெற்ற ரூபாய் 10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி இந்த தொகையை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.