ஜல்லிக்கட்டை காண வந்தவர் மாடு முட்டி பலி
ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டை காண வந்தவர் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் நேற்று புனித சூசையப்பர் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 650 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனை பார்க்க சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண நல்லணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி என்பவர் வந்திருந்தார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை காண வந்த ரவியை, ஜல்லிக்கட்டு காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.