ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து துணை ராணுவம் வெளியேறியது

 
துணை ராணுவம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ படையினர் அங்கிருந்து வெளியேறினர்.  

சட்டவிரோத பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.  இதனிடையே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்ததை உறுதி செய்த நீதிபதி, அவரை வருகிற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரைவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறை காவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். 
  
இந்நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ படையினார் அங்கிருந்து வெளியேறினர்.  புழல் சிறைத்துறை நிர்வாகத்தின் கீழ் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டதால், பாதுகாப்பு பொறுப்பை ஆயுதப் படை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறையினர் ஒப்படைத்தனர்.
 இதையடுத்து துணை ராணுவப் படையினர் வெளியேறிய நிலையில், ஆயுதப் படை காவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஓமந்தூரார் மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது.