சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திய பெற்றோர்! நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்

 
சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திய பெற்றோர்! நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகு, (21) பட்டியலின இளைஞரான இவர், அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த நர்மதா என்ற பெண்ணை கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பாதுகாப்பு கருதி வெளியூரில் தங்கி இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தியாகு தனது சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிக்கு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தியாகு வீட்டிற்கு வந்திருப்பதையறிந்த நர்மதாவின் பெற்றோர், மற்றும் அவரது உறவினர்கள், நேற்று முன்தினம் தியாகுவின் வீட்டிற்கு சென்று நர்மதாவை அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் சரமாரியாக தாக்கி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து தியாகு தனது மனைவி நர்மதாவை அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன்கள் கோவிந்த ராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் ஈச்சங்கால் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர்  கடத்திச்சென்றதாக கூறி அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நர்மதாவை கடத்திச்சென்ற அவரது தந்தை மற்றும் அண்ணன்கள் என 5 பேர் மீது அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து  நர்மதா மற்றும் அவரது பெற்றோர், அண்ணன்களை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பெயரில் ஏழு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் தங்களை நெருங்குவதை உணர்ந்த பெண் வீட்டார் ஆம்பூர் டி.எஸ்.பி அலுவகத்தில் 2 வழக்கறிஞர்களுடன் பெண்ணை சரணடைந்து வைத்தனர். இதையடுத்து போலீசார் நர்மதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது நர்மதா தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் பெற்றோர் அழைத்ததால் சென்றேன் என்றும் தன் கணவருடன் செல்வதாக ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரவி முன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து நீதிமன்ற நடுவர் உத்தரவின் பேரில் நார்மதாவை போலீஸ் பாதுகாப்புடன் கணவர் தியாகு வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டார்.