செவிலியர் இல்லாததால் தானே கட்டுப்போட்டு கொண்ட நோயாளி! அரசு மருத்துவமனை அவலம்

 
ச்

சீர்காழி அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்த நபர் செவிலியர் இல்லாததால் தானே கட்டுப்போட்டு கொண்ட வீடியோ வைரலாகிவருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சீர்காழியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து  தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளிகளாகவும், புற  நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு காலில் அடிபட்ட நிலையில் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் மருத்துவர்கள் இல்லாத நிலையில் காயத்துக்கு கட்டுப்போட செவிலியரும் அந்த நேரம் இல்லாததால் அங்கிருந்த டிஞ்சர்  மருந்தை வைத்து அதன் பின்னர் தனக்குத்தானே காலில் கட்டுபோட்டுக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீர்காழி அரசு மருத்துவமனையில் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பது போன்றும், புறநோயாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும்போது மருத்துவர்கள் இல்லாத நிலை  குறித்தும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவிய நிலையில் தற்போது மீண்டும் அரசு மருத்துவமனையில் அவல நிலை குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.