நேற்று சிறையில் அடைக்கப்பட்ட கைதி இன்று மரணம்! போலீசார் அடித்து கொன்றதாக புகார்
விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அற்புதராஜ் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த இளைஞர் அற்புதராஜ்(30) என்பவர் மீது அடிதடி வழக்கு சம்மந்தமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் தலைமறைவாக இருந்து வந்த அற்புதராஜை, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் கடந்த 4 மாதங்களாக தேடி வந்ததுள்ளனர். இந்நிலையில் ஜிஆர்பி தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அற்புதராஜை நேற்று விழுப்புரம் டி.எஸ்.பி தனிப்படை போலிசார் பிடித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் போலீசாருக்கு டிம்மிக்கி கொடுத்துவிட்டு 4 மாதங்களாக தலைமறைவாக இருந்ததால் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் பிடிப்பட்ட அற்புதராஜை, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விழுப்புரத்தில் உள்ள கிளை சிறையில் நேற்று மாலை போலீசார் அடைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அற்புதராஜிற்கு திடீரென உடல்நிலைப் பாதிக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்ட சிறையில் இருந்து சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறை போலீசார் அழைத்து சென்றனர்.
அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் தாக்கிய காரணத்தாலேயே உடல் நிலை பாதிக்கப்பட்டு அற்புதராஜ் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விழுப்புரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.