ஹஜ் பயணம் செல்வதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் உடனடியாக களையப்பட வேண்டும்- ஜவாஹிருல்லா
ஒன்றிய அரசின் மெத்தனத்தினால் ஹஜ் பயணம் செல்வதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் உடனடியாக களையப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலமாக இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்கு 52,௦௦௦ நபர்களுக்குச் சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்திருந்தது. ஹஜ் பயணம் செல்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் கடந்த மார்ச் 25ஆம் தேதி இறுதி நாள் என்று காலக்கெடுவும் சவுதி அரசால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் செல்வோரிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவான மெத்தனப் போக்கினால் அந்த பெரும் தொகை சவுதி அரசிற்குக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனுப்பி வைக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல இருந்த 52 ஆயிரம் ஹாஜிகளின் விசாவை சவுதி அரசாங்கம் நிறுத்தி வைத்துவிட்டது.
கடந்த காலங்களில் ஒன்றிய அரசின் சிறுபான்மை நல அமைச்சகத்தின் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மக்காவில் ஹஜ் யாத்திரிகர்கள் தங்குவதற்கான கூடாரங்கள் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஆயிரக்கணக்கான ஹஜ் புனித பயணிகள் கடும் சிரமத்திற்கு இலக்காகினர். இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கான வாய்ப்பையே உருவாக்கித் தராமல் ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது. முஸ்லிம்களின் ஐந்தாவது கடமையான ஹஜ் பயணம் செல்வதற்குக் கனவுகளோடு காத்திருந்த முஸ்லிம்களின் எண்ணங்களை ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை தவிடுபொடி ஆக்கி இருக்கிறது. உடனடியாக ஒன்றிய அரசு காலதாமதம் இன்றி துரிதமாகச் செயல்பட்டு ஹஜ் பயணம் செல்வதற்குப் பணம் செலுத்தி இருந்த 52,000 இந்திய முஸ்லிம்களின் மார்க்க கடமையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


