பாதியில் நின்ற ரோலர் கோஸ்டர்... சென்னை வொண்டர்லாவின் திக் திக் நிமிடங்கள்..!

 
1 1

சென்னையை அடுத்த திருப்போரூர் வட்டம் இல்லலூர் பகுதியில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டது. 611 கோடி ரூபாய் செலவில் 43 உலகத் தரம் வாய்ந்த சவாரிகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

முதல் நாளான நேற்று பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மகிழ்ச்சியான மற்றும் புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து சென்றதாகவும், ஆனால் அங்கு முதல் நாளில் ஒரு மோசமான அனுபவம் கிடைத்ததாக அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

பல ரைட்கள் முறையாக செயல்படவே இல்லை என்பதே, டிக்கெட் வாங்கி உள்ளே சென்றவர்களின் மனக்குமுறலாக உள்ளது. இதனால், முதல் நாளே இப்படியா? என பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோலர் கோஸ்டர் 20-க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டு சென்ற போது, பாதி வழியிலேயே நின்றுவிட்டது. இதனால் அதில் இருந்தவர்கள் மிகவும் அச்சமடைந்தனர். இதே போன்று ஆக்டோபஸ் கரங்கள் உள்ளிட்ட பல ரைட்களும் பொதுமக்களுடன் பாதி வழியில் அந்தரத்தில் நின்றுள்ளன. மேலும் பொழுதுபோக்கு பூங்காவில் பல பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் அவசர கதியில் திறக்கப்பட்டு உள்ளதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.