என்கவுண்டர் சம்பவத்தில் கொல்லப்பட்டது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரியாது- காவல் இணை ஆணையர்
பிரபல தாதா காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் தண்டையார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
என்கவுண்டர் சம்பவம் எப்படி நடந்தது என விளக்கிய அவர், “அதிகாலை 4.30 மணியளவில் பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட கார் வந்தபோது, போலீசார் அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த இரண்டு நபர்களில் ஒருவர் கீழே இறங்க அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அந்த காரை வேகமாக எடுத்துக்கொண்டு தப்பி சென்றார். உடனடியாக சார்பு ஆய்வாளர் நாதமுனி சென்னை காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்தார், அப்போது ரோந்து பணியில் இருந்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தனது வாகனத்துடன் முல்லை நகர் வியாசர்பாடி மெயின் ரோட்டில் காருடன் அந்த நபர் தப்பிச் செல்வதை பார்த்து பின் தொடர்ந்து சென்று வியாசர்பாடியில் உள்ள பாழடைந்த பிஎஸ்என்எல் குடியிருப்பு வளாகத்திற்குள் வைத்து அந்த காரில் இருந்த நபரை மடக்கிப் பிடித்தார்.
காரில் இருந்து அந்த நபர் இறங்காமல் யாரும் எதிர்பார்க்காத வகையில் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஆய்வாளரின் காரை நோக்கி சுட்டார். அதிகாலை 4.50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் போது ஆய்வாளர் காரின் முன்பக்கத்தில் இரண்டு முறை அடுத்தடுத்து அந்த நபர் சுட்டார். காவல் ஆய்வாளர் எச்சரித்தும் அந்த நபர் கேட்காததால் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் திருப்பி சுட்டதில் காரில் இருந்த நபர் காயமடைந்து கீழே விழுந்தார். பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. உயிரிழந்த பிறகே என்கவுண்டர் செய்யப்பட்டது 59 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. எழும்பூர் பத்தாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்த உள்ளோம். காக்கா தோப்பு பாலாஜியின் வாகனத்தில் வந்து கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி. அவர் வைத்திருந்த கைப்பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. காக்கா தோப்பு பாலாஜி பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை சப்ளை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரித்துவருகின்றோம்” என்றார்.