மீண்டும் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்! சுமார் 100 அடிக்கு உள்ளே போனதால் அதிர்ச்சி
திருச்செந்தூரில் இரண்டாவது நாளாக 100 அடி உள்வாங்கிய கடலில் ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று ஐயப்ப பக்தர்கள் செல்பி எடுத்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நேற்று முதல் 29 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென திருச்செந்தூர் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இன்று காலையில் சாதாரண நிலையில் இருந்து வந்த திருச்செந்தூர் கடல் இன்று இரண்டாவது நாளாக மாலையில் மீண்டும் உள்வாங்கி காணப்படுகிறது. நேற்றைய தினம் 80 அடி உள்வாங்கிய கடல் இன்றைய தினம் சுமார் 100 அடிக்கு உள்வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. அதன்மேல் நின்றபடி ஆபத்தை உணராமல் ஐயப்ப பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.