காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்ற மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு...

 
மணிகண்டன்

ராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து , அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே நீர்க்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சஞ்சய் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியும்,  அவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். 

தீவிரமடையும் டெங்கு காய்ச்சல் : வேலூரில் 5 வயது சிறுமி உயிரிழப்பு..!

இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்று விரட்டி பிடித்துள்லனர்.  பின்னர் மணிகண்டனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  இதனையடுத்து மாலை  06.30 மணி அளவில் மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல்துறையினர், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.  பின்னர் வீட்டிற்கு சென்ற மணிகண்டன் இரவில் தூங்கிய நிலையில் காலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் .

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மாணவரை துன்புறுத்தி கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காவல் நிலையத்திலிருந்து அழைத்து வரும்போதே மணிகண்டனால் நடக்க முடியவில்லை எனவும்,  பின்னர் வீட்டிற்கு வந்த அவர் மூன்று முறை ரத்த வாந்தி எடுத்தார் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.  மணிகண்டன் பிறப்புறுப்பில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மனிகண்டன் 1

ஆனால் காவல்துறையின் தரப்பிலிருந்து மணிகண்டனை தாங்கள் தாக்கவில்லை என்றும் , பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.  அதனை ஏற்க மறுத்து உறவினர்கள்  அரசு மருத்துவமனை வாயில் முன்பாக , முதுகுளத்தூர் -  பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கீழ்த்தூவல்  காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் லட்சுமி  உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என மணிகண்டன் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். 

பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை  மற்றும் முதுகுளத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மணிகண்டன் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  உரிய விசாரணை நடத்தப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.