நேற்றுடன் முடிவடைந்த பதவிக்காலம்.. டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில், ஒன்றிய அரசு ஆளுநரின் பதவி காலத்தை நீடித்து அறிவிப்பு வெளியிடவில்லை. இந்த நிலையில் ஆளுநர் ரவி, 4 நாட்கள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவரது பதவி நீடிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இதுவரையில் ஆளுநரின் பதவி நீடிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அதோடு தமிழ்நாட்டிற்கு புதிய கவர்னர் நியமனம் தொடர்பாக அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால் மத்திய அரசிடம் இருந்து முறையாக அறிவிப்பு வரும் வகையில் ஆர்.என்.ரவியே தமிழ்நாடு கவர்னராக நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே டெல்லியில் அனைத்து மாநில ஆளுநர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழன்) காலை 9.50 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்ட அவருடன் ஆளுநரின் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
டெல்லி செல்லும் கவர்னர் ரவி, ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்பதோடு குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த போதும், பிரதமர் , உள்துறை அமைச்சர், ஒன்றிய கல்வி அமைச்சர் ஆகியோரை ஆளுநர் சந்தித்து பேசியிருந்தார். அப்போது குடியரசித் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைக்காததால் அவரை சந்திக்காமலேயே சென்னை திரும்பினார். இந்த நிலையில் இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, தனது 4 நாட்கள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 4ம் தேதி சென்னை திரும்புகிறார்.


