தீர்ப்பு வரவேற்கத்தக்கது.. ஆனால் மேற்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதி செய்க - அன்புமணி..!

 
anbumani anbumani

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30  ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது என்றும், மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்  குற்றவாளி என  அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை  விதித்து மகளிா் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  தலைவர்களின் பிறந்தநாள்கள் உள்ளிட்ட சிறப்பு தருணங்களை பயன்படுத்தி தண்டனைக் காலத்தைக் குறைக்கக்கூடாது என்றும் நீதிபதி கட்டுப்பாடு  விதித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 

anna univ

பாலியல் வழக்குகளில் வழங்கப்படும் தண்டனைகள்  அத்தகையக் குற்றத்தை வேறு எவரும் செய்யாமல் தடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். அந்த  வகையில் குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளிலும் அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகச்சரியான நடவடிக்கை ஆகும். இதற்கு காரணமான  அனைவரும் பாராட்டத் தக்கவர்கள்.

விசாரணை நீதிமன்றத்தின்  தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் போது, அங்கும்  திறமையான வழக்கறிஞர்களை வைத்து குற்றவாளி தப்பிவிடாமல் தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.  பாதிக்கப்பட்ட மாணவிக்கான இழப்பீடாக குற்றவாளி செலுத்தும் ரூ.90 ஆயிரம் அபராதத்தை  வழங்கும்படி நீதிமன்றம்  கூறியுள்ளது. இது போதுமானது அல்ல.  பாதிக்கப்பட்ட மாணவிக்கு குறைந்தது ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

anna univ

இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.   அவர்களை  பாதுகாக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது.   அவர்கள் யார் ? என்பதைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.