மாநாட்டிற்கு சென்ற தொண்டர் அரசு பேருந்து மோதி பலி! உதயநிதி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சென்ற தொண்டர் அரசு பேருந்து மோதி பலியான நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் திமுக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி தலைமையில், சுமார் 50 பேர் தனியார் பேருந்து மூலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொண்டனர். அதனையடுத்து மாநாடு முடிந்து மீண்டும் இரவு சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு அனைவரும் சாப்பிடுவதற்காக இறங்கி சென்றுள்ளனர். அதில், பேருந்தில் வந்திருந்த திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் நெசவாளர் காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார் (33), என்பவர் தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது கோயமுத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த திமுக தொண்டர் சதீஸ்குமாருக்கு திருமணமாகி கார்த்திகா(24) என்ற மனைவி உள்ளார். சம்பவம் அறிந்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு வந்த திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஈரோடு பிரகாஷ் மாநாட்டிற்கு வந்து விபத்தில் பலியான சதீஸ்குமார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து சதீஸ்குமார் குடும்பத்தினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் உதவி நிதியாக ரூ.1லட்சம் ரொக்கம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, திருப்பூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயகுமார், சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, சங்ககிரி ஒன்றிய செயலாளர் ராஜேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.