‘என்னால நீ கடனாளியானியா?’ தாய்மாமன் சீர்வரிசையை ஊர்வலமாக சென்று திருப்பி கொடுத்த பெண்

 
சீர்

திருத்தணி அருகே தாய்மாமன் சீதனம் திரும்ப கேட்டு  தொல்லை தந்ததால் உறவினர்களுடன் ஊர்வலமக சென்று  சீர்வரிசை திருப்பிக் கொடுத்த பெண்ணின் செயல் ருசிகரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருகே கீழ் நெடுங்கல் காலனியைச் சேர்ந்தவர் மீனா(36) அவரது கணவர் சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனா மகள் வினிதாவுக்கு   கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது  மீனாவின் தம்பி சரவணன்(38) தாய்மாமன்  சீதனமாக புத்தாடை, பழங்கள்,  பாய், தலையாணை, தட்டு,  உட்பட ரூ. 2500 ரொக்கத்துடன் ஊர்வலமாக சென்று  வழங்கினார். 

இந்நிலையில் சரவணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகவும், அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செலவு செய்ததால், கடன் ஆனதாக கிராமமக்களிடம் சரவணன் மனைவி  ரூபினி ஊர் மக்களிடம்  கூறி வருவதாக கூறப்படுகின்றது. மேலும்  மஞ்சள் நீராட்டு விழாவில் வழங்கிய சீதனம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று மீனாவிடம் ரூபினி தொடர்ந்து வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால்  ஆத்திரமடைந்த மீனா அவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவின் போது தாய்மாமன் சீர்வரிசையாக வழங்கிய பொருட்கள் மற்றும் பணம் திருப்பி தர முடிவு செய்து பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடை, தட்டு , மற்றும் ரொக்கம்   ரூ. 2500 உட்பட   சீர்வரிசை  உறவினர்களுடன் எடுத்துச் சென்று ரூபினி வீட்டு வாசளில்  வைத்தார். மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக சீதனமாக வழங்கிய பொருட்களை  மீண்டும் திரும்ப ஒப்படைத்த சம்பவம்  நெடுங்கல் பகுதியில்  பரபரப்பை ஏற்ப்படுத்தியது.