அரிசிக்கொம்பனை பிடிக்கும் பணி 3வது நாளாக நீடிப்பு..

 
அரிசிக்கொம்பனை பிடிக்கும் பணி 3வது நாளாக நீடிப்பு..

அரிசிக்கொம்பன் யானை மேகமலை பகுதிக்கு குடிபெயர்ந்துவிட்டதால் கம்பம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் யானையை பிடிக்கும் முயற்சி 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் சுற்றித்திரியும் அரிசிக்கொம்பன் காட்டு யானையால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட சுற்றுவட்டார  கிராமங்களில் சுற்றித்திரிந்த இந்த யானை  கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8 பேரை கொன்றுள்ளது. அத்துடன்  ஏராளமான விளை பயிர்களையும் நாசம் செய்துள்ளது.  இதையடுத்து ஊருக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் யானையை  கடந்த மாதம் 29-ந்தேதி தான் கேரள வனத்துறை மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதகானம் வனப்பகுதியில் விட்டனர்.   பின்னர் அங்கிருந்து மெல்ல மெல்ல இடம்பெயர்ந்து  தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

சுருளியில் முகாமிட்டுள்ள அரிசிக்கொம்பன் யானை.. 144 தடை நீட்டிப்பு..

கம்பம் நகருக்குள் ஒய்யார நடை போட்ட அரிசிகொம்பனை பார்த்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  தொடர்ந்து வனப்பகுதியினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.  யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டனர்.  பின்னர் யானை நேற்று காலை கம்பத்தில் இருந்து சுருளிபட்டிக்கு இடம்பெயர்ந்து.  இதனையொட்டி கம்பம், சுருளிப்பட்டி பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தநிலையில், அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், போலீசார் 3-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என  மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.