பவுசன்ர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. வெளியான புதிய வீடியோ.. விஜய் மீதான வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மற்றம்..!
தவெக மாநாட்டில் இளைஞர் ஒருவர் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், 2,500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மாநாட்டில் சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு விஜய் ரேம்ப் வாக் செல்வதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. விஜய் “உங்கள் விஜய்.. நான் வரேன்.. ” என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயை நெருங்கி வர முயன்றனர். அவர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்திய வண்ணமே சென்றனர். அத்துடன் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே விழா ஏற்பாட்டாளர்கள் இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவி இருந்தனர். ஆனாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் ரேம்ப் வாக் சென்றபோது , , பவுன்சர்களையும் மீறி ஒரு சில ரசிகர்கள் மேடையில் ஏறி குதித்து விஜய் அருகே நெருங்கி வந்தனர்.

அவர்களை தடுத்த பவுன்சர்கள், குண்டுக்கட்டாக மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். அதில் சரத்குமார் என்கிற பவுன்சர்கள் தூக்கி எறிந்தபோது அவர், கம்பியைப்பிடித்து தொற்றிக் கொண்டார். ஒருவேளை அவர் கீழே விழுந்திருந்தால் அவரது கைகால்கள் உடைந்திருக்கும் அல்லது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். இளைஞர் தூக்கி வீசப்படும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அத்துடன் அதனை பார்த்த அந்த இளைஞர்களின் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, அவருடைய தாயாரும் உடன் சென்று புகார் கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தீடீர் திருப்பமாக பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் தோன்றி, தான் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் அல்ல, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய். பாதுகாவலர்கள் என்னை அங்கிருந்து அகற்ற மட்டுமே செய்தனர், கட்சியின் வளர்ச்சி பிடிக்காத சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகிறனர் என்று தெரிவித்தார். இந்நிலையில் பவுன்சர்கள் இளைஞரை தூக்கி வீசியது தொடர்பான மற்றொரு வீசியோ வெளியாகியுள்ளது. அதில் கீழே வீசப்பட்ட இளைஞரை பவுன்சர்கள் பத்திரமாக இறக்கிவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


