‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு - சீமான் தலைமையில் இன்று திரையரங்கு முற்றுகை!

 
seeman

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று திரையரங்கு முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்தி திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரபை ஏற்படுத்தியது.  கேரளாவைச் சேர்ந்த  இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த  32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு  கட்டாய மத மாற்றம் செய்யப்படுகின்றனர்.  அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று  காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது.  இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்க இருக்கிறார். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.