வாட்ஸ் ஆப் குரூப்பில் தவறான தகவல் பரவல் - தேனியில் குரூப் அட்மினுக்கு நேர்ந்த கதி!

 
whatsapp

தவறான, தேவையற்ற தகவல்களை வாட்ஸ் ஆப்பில் பரப்பியதின் விளைவாக தேனியில் குரூப் அட்மினுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் ஆப்களில் தவறான தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் மற்றும் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றனர். அவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் வாட்ஸ் ஆப் குரூப்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தேனியில் தவறான தகவல்களை வாட்ஸ் ஆப்பில் பரப்பியதின் விளைவாக தேனியில் குரூப் அட்மினுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாத் என்பவர் ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை தொடங்கி அதில் அட்மின் ஆக உள்ளார். இந்நிலையில், அந்த குரூப்பில் கடந்த 15ம் தேதி சைபர் குற்றத்திற்குட்பட்ட தகவல் ஒன்று பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குரூப் அட்மின் ஆன விஸ்வநாத்தை காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

cyber Crime

இது தொடர்பாக மாவட்ட குற்ற பிரிவு போலீசார் அவருக்கு அனுப்பியுள்ள அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர் என்ற பெயரில் இயங்கி வரும் வாட்ஸ் ஆப் குரூப்பின் நிர்வாகியாக (ADMIN) இருந்து வரும் வாட்ஸ் ஆப் குரூப்பில் 15.02.2023 ம் தேதி பகிரப்பட்டுள்ள சில தகவல்கள் சைபர் கிரைம் குற்றத்திற்குள் வருவதால் தாங்களை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியுள்ளதால் தங்களது செல்போன் மற்றும் பதிவுகளுடன் வருகின்ற 18.02.2023 ம் தேதி காலை 11.00 மணிக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றபிரிவில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த குரூப்பில் உள்ள 141 உறுப்பினர்களை மேற்படி விசாரணை முடியும் வரை குரூப்பிலிருந்து வெளியேற்றாமல் இருக்க தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.