தொலைத்தொடர்பு தகவல்களை ஆராய்ந்து வரும் அரசு-கொடநாடு வழக்கில் பரபரப்பு

 
ke

தொலைத்தொடர்பு தகவல்களை ஆராய்ந்து வருவதால் அரசு தரப்பில் கால அவகாசம் வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து கொடநாடு வழக்கில் விசாரணை வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று கொலை மற்றும் கொள்ளை முயற்சி நடந்தது.   கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டிருந்தார். 

ko

 இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான்,  வாளையாறு மனோஜ்,  சந்தோஷ் சாமி,  தீபு, சதீசன் , விஜின்,  மனோஜ் சாமி,  ஜம்ஷீர் அலி,  ஜித்தின் ஜாய், உதயகுமார் ஆகியோரை கைது செய்திருந்தனர்.  இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

 இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது . தற்போது கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றது. கொடநாடு கொலை -கொள்ளை வழக்கு விசாரணை இன்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது போது,  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்கள்.

 அப்போது,  தொலைத்தொடர்பு தகவல்களை ஆராய்ந்து வருவதால் அரசு தரப்பில் கால அவகாசம் வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.  வழக்கில் இதுவரைக்கும் நடந்த விசாரணை குறித்த தகவல்களை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதன் பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி அரசுக்கு அவகாசம் வழங்கி விசாரணையை வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.