தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடத் தடையில்லை- ஐகோர்ட்
தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும். புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விரைவில் ஒடிடியில் வெளியாக உள்ளதாகவும் அவ்வாறு வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு, திரைப்படம் தணிக்கை சான்று பெற்று தான் திரைப்படம் வெளியாகி இருப்பதால் தங்கலான் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.


