திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் நோக்கம் இல்லை - வைகோ பேட்டி

 
vaiko mk stalin

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியின் கோரிக்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.

vaiko

மதிமுகவில் வாரிசு அரசியலை கண்டித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு அவை தலைவர் துரைசாமி நேற்று கடிதம் ஒன்றை எழுதினார். அதில் மதிமுகவை அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  அத்துடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக எடுத்து நடவடிக்கைகளால் கட்சி பாதிக்கப்படுவது குறித்து தான் கடிதம் எழுதியதாகவும் , அந்த கடிதங்களுக்கு பதில் வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

அவைத் தலைவர் துரைசாமியின் இந்த கடிதம் மதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கடிதத்தை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும் , வைகோவின் மகனுமான துரை வைகோ கூறியுள்ளார்.

durai vaiko

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , "மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது.  தமிழ்நாடு முழுவதும் 70 சதவீதம் மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன்.  இரண்டு வருடங்களுக்கு கட்சிக்கு வராமல் தற்போது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.  மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.  நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம்; நிராகரிக்கிறோம்.  எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடந்தது. இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் "என்று கூறியுள்ளார்.