ஆட்டிறைச்சிக்கு விலை நிர்ணயம் இல்லை - தமிழக அரசு
ஆட்டிறைச்சிக்கு விலை நிர்ணயம் இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் டாக்டர் என் சுப்பையன், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். அதன்படி இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தனி இணையதளம் உருவாக்கப்படும் எனவும், தினமும் இறைச்சி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டிறைச்சி விலையை அறிவிப்பதற்கான தகவல் பலகை மட்டுமே தயாராகிறது என்றும் ஆட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கான விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய முடியாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதேபோல் ஆட்டிறைச்சி மற்றும் நாட்டுக்கோழி இறைச்சிக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய உள்ளதாக வெளியான தகவலுக்கு கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் மறுப்பு கூறியுள்ளார்.


