முதலமைச்சர் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய நேரமிருக்கு.. தவெக மாநாட்டிற்கு வாழ்த்து கூறிய அண்ணாமலை..!!
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், த.வெ.க மாநாட்டிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த நாகலாந்து ஆளுநர் இல கணேசன் தியாகராய நகர் இல்லத்திற்கு நேரில் சென்ற பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இல கணேசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி.இராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நிச்சயமாக வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார்.
தமிழகத்தில் அனைவரும் ஒன்றாக இருந்து சி.பி.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது எங்கள் கட்சியின் விருப்பம். கடந்த காலங்களில் பிரதீபா பாட்டிலுக்கு சிவசேனா கட்சியினர் ஆதரவு கொடுத்தார்கள். இந்த விவகாரத்தில் அரசியல் பார்க்காமல் சி.பி.ராதாகிருஷ்ணனோடு நிற்பார்கள் என்று நம்புகிறோம். இந்தியா கூட்டணி வேட்பாளரும் நல்ல வேட்பாளர் தான். முதலமைச்சர் இந்திய கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் இருந்து ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. தமிழருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாக்கு போக்கு சொல்லாமல் இதில் அரசியல் இல்லை என்பதை சொல்வதற்கு இது ஒரு வாய்ப்பு. தமிழருக்கு துணை நின்றோம் என்ற கருத்தை மக்களிடம் வைக்க திமுகவுக்கு இது நல்ல வாய்ப்பு” என்றார்.

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “இந்த மசோதா பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர், மாநில அமைச்சர்கள் என அனைவருக்குமான சட்டம். தனிப்பட்டவர்களுக்கானது அல்ல; டெல்லியிலும், திமுக அரசிலும் ஒருவர் சிறையிலிருந்து கொண்டே அமைச்சராக இருந்தார். எனவே வரவேற்கப்பட வேண்டிய சட்டம். யாரெல்லாம் பதவி பிரமாணம் எடுத்தார்களோ எல்லோருக்கும் இந்த சட்டம் பொருந்தும். 13 நாட்களில் பெயில் கிடைத்துவிடும். ஆனால் 30 நாட்கள் கிடைக்காத பட்சத்தில் தான் இந்த சட்டம் பொருந்தும். இந்த சட்டத்தின் மூலம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்தால் அந்த பொறுப்பில் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு பிறக்கும்.
அனைவருக்கும் மாநாடு நடத்த உரிமை உள்ளது. தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு வாழ்த்துகள். ஆக்ரோஷமாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்... செல்லட்டும். ஆனால் மக்கள் எங்களின் சித்தாந்தத்தை, கொள்கையையும் அதிகமாக நம்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்தார்.


