"மது இல்லாத தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 
GK Vasan

தமிழகத்தில்  மதுக்கடைகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, 500 மதுக்கடைகளை மூடுவது அ.தி.மு.க. த.மா.கா. பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் என்பதால் இதன் தொடர்ச்சியாக குறுகிய காலத்திற்குள் மது இல்லாத தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும் என த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்
தமிழக அரசு, தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்றான மது இல்லாத தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. குறிப்பாக அ.தி.மு.க. த.மா.கா. பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தான் தமிழக அரசு தற்போது 500 மதுக்கடைகளை மூடுகிறது.

tasmac

தமிழக அரசு, ஆட்சிக்கு வந்த உடனேயே மதுக்கடைகளை மூட அறிவிப்பை வெளியிட்டு செயல்படுத்தும் என்று தான் பொது மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மதுக்கடைகளின் மூலம் கிடைக்கும் வருவாயை முக்கிய கவனத்தில் கொண்டு, மதுவால் சீரழிபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைப் பற்றி கவனத்தில் கொள்ளாதது வேதனைக்குரியது.மேலும் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் மதுக்கடைகளின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆட்சியை நடத்தி, தற்போது காலம் தாழ்த்தி மதுக்கடைகளை மூட எடுத்திருக்கும் முடிவால் ஓரளவுக்கு மதுவால் சீரழியும் நபர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு.இருப்பினும் தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் படிப்படியாக மூட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

gk vasan

அப்போது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓரளவுக்கு நிலைநாட்டப்படும். அதாதவது மதுவால் ஏற்படும் பிரச்சனையால் பெண்களின் வாழ்க்கை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதோடு, சமுதாயத்தில் திருட்டு, கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் மாணவர்களும், இளைஞர்களும் மதுவின் பிடியில் இருந்து விடுபடவும், வளமான தமிழகம் உருவாகவும் மது இல்லாத தமிழகமே தேவை. எனவே தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடும் அதே சமயம், இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி குறுகிய காலத்திற்குள் மதுக்கடைகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.