மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது - தினகரன்

 
ttv dhinakaran ttv dhinakaran

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தையின் மூலம் மேகதாது அணைத் திட்டம் தொடங்கப்படும் என மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு.சோமண்ணா அவர்கள் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

TTV Dhinakaran

தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், மேகதாது அணை குறித்த அமைச்சர் திரு.சோமண்ணா அவர்களின் பேச்சு தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரு.சோமண்ணா அவர்களை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக நியமிக்கும் போதே, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக் குரல்களை நியாயமாக்கும் வகையில் அவரது செயல்பாடுகளும் ஒருதலைபட்சமாக அமைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.


 

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பது திரு.சோமண்ணா அவர்கள் வகிக்கும் அமைச்சர் பதவி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, இனியாவது இரு மாநிலங்களுடையேயான பிரச்னைகளை அதிகப்படுத்தும் விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தவிர்ப்பதோடு, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என திரு.சோமண்ணா அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.