2026ல் தேர்தலில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.. அது பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட சட்டமன்றத்தில் நுழையாமல் இருப்பதுதான் - சேகர்பாபு..!!
2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருவர் கூட தமிழக சட்டப்பேரவைக்குள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நுழையாமல் இருப்பது தான் மாற்றமாக இருக்கும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று கொளத்தூர், பூம்புகார் நகர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டட கட்டுமானப் பணி மற்றும் கொளத்தூர், ராஜாஜி நகர் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுமானப் பணிகளை இன்று ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு. “இந்து சமய அறநிலை துறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அறம் சார்ந்த நிறுவனம் என்பதால் அறப்பணிகளில் கல்வி கொடுப்பதும் ஒரு பணியாக ஏற்றுக் கொண்டு மறைந்த தலைவர்கள் பக்தவச்சலம் காலம் முதல் கலைஞர்,அதிமுக ஆட்சியிலும் இதுபோன்ற பள்ளி,கல்லூரிகள் அமைக்கப்பட்டது தான் வரலாறு.

கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பில் கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு நோக்கி சென்று கொண்டுள்ளது. 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 32 அறைகள் கொண்டதாக இருக்கும். இந்த கல்லூரி மூலமாக இந்த பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது அமையும். அதே போல் கொளத்தூரில் ரூ. 8.88 கோடியில் கருணை இல்லம் கட்டப்பட்டு வருகிறது. இதில் யோகா, நடை பயிற்சி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட காப்பகமாக இது இருக்கும். இதுவும் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும். உண்டு உறைவிட காப்பகத்தின் தொடர் செலவுக்கு செல்வந்தர்கள் நன்கொடை வரவேற்கப்பட்டு வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது.மேலும் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.
அவரிடம், 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது கட்டாயம் என்று நேற்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதிகளை தாண்டி வெல்வோம் என்றதை இந்தியா கூட்டணி முறியடித்து கிட்டத்தட்ட இழுபறியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது தான் பெரிய மாற்றமாக உள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். தற்போது பாஜகவிற்கு தமிழக சட்டப்பேரவையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையாமல் இருப்பது தான் ஒரு மாற்றமாக இருக்கும்” என்றார்.


