ஆட்சியில் பங்கு கேட்க வேண்டிய நேரம் இதுவல்ல- திருமாவளவன்
டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் இல்லை. மக்களின் செல்வாக்கு ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கடந்த கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் 100 ஆண்டு தொட்ட கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல் தேர்தலை சந்தித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. புதுடில்லியில் உள்ளது போல் தமிழகத்தில் நிலைமை இல்லை. தமிழகத்தில் ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மக்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. எனவே ஆட்சியில் பங்கு பற்றி கேட்க இது சரியான நேரம் அல்ல என காங்கிரசுக்கும் தெரியும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தெரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய எங்களுக்கும் இது தெரியும்.
தமிழகத்தில் துணை முதல்வர் நியமனம் என்பது முழுக்க முழுக்க திமுகவின் உட்கட்சி அரசியல். இதில் பிற கட்சிகள் கருத்து கூற அவசியம் இல்லை. ஒரு துணை முதல்வர் அல்ல, பல துணை முதல்வர்களையும் நியமனம் செய்யலாம், பல புதிய அமைச்சர்களையும் நியமிக்கலாம், அது அந்த கட்சியின் சுதந்திரம். ஆளுநர் ஆளுநர் பணியை கவனிக்க வேண்டும்.
தமிழகம் உயர்கல்விக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்கனவே கொண்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து மருத்துவம், பொறியியல் போன்றவற்றை படித்து வருகின்றனர். தமிழகத்தின் கல்விக் கொள்கை நன்றாகவே உள்ளது. இந்தியாவில் உயர்கல்வியில் அதிக வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது” என்றார்.