வரும் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி., சுதந்திர தின வாழ்த்து..

 
Thirunavukarasar

வரும் ஆண்டு  நிச்சயமாக  மக்களுக்கான  நல்லாட்சி அமைய வேண்டும் எனக்கூறி, காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்று,   நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிய  இந்நாளில் அனைத்து இந்தியர்களுக்கும் எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கலாம், ஆனால் சாதி மத இன வேறுபாடுகளை கடந்து சமூக நல்லிணக்கத்தோடு அனைவரும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அனைவருக்கும் கல்வி கிடைத்துள்ளதா?   படித்த இளைஞர்களுக்கு வேலையின்மை போக்கப்பட்டுள்ளதா?  சீரான பொருளாதார வளர்ச்சியை   நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறதா? என்றால் இல்லை. இவையெல்லாம் என்று நிறைவேறுகிறதோ அன்றே பாரதம் உண்மையான சுதந்திரம் அடைந்தது எனலாம்.  வெறும் மேடைப் பேச்சுக்களோ, அலங்கார வாரத்தைகளோ ஏழையின் வயிற்றை நிரப்பாது.  இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லாது,   பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று கூறிக்கொண்டு இருந்தால் போதாது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.  

தேசியக்கொடி

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும். பாசிச சக்திகள் ஒடுக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டும். மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நடக்கும் அராஜகம், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும்.        இவை அனைத்தும் செய்ய வல்லது I.N.D.I.A. மட்டும் தான். வரும் ஆண்டு  நிச்சயமாக  மக்களுக்கான  நல்லாட்சி அமைய வேண்டும், அமையும்  என்று கூறி மீண்டும் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.