“திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு... சில கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கின்றனர்”- திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி
திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார், வைகைச் செல்வன் விளம்பரத்திற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பேசியுள்ளார், அவர் அவரது விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்திருக்கலாம் அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உணவை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “தலைவர்களுக்குள் ஆயிரம் சந்திப்புகள் சாதாரணமாக நடக்கும். அதை வைத்து கூட்டணி முடிவாகிவிட்டது என்று கூறிவிட முடியாது. வைகைசெல்வன் அவரது விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்திருக்கலாம். விளம்பரத்திற்காக ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கூறியுள்ளார். அதில் தனக்கு நம்பிக்கை இல்லை, கூட்டணியில் இருந்து திருமா வெளியே செல்லமாட்டார்.

சில கருத்து வேறுபாடுகள் திமுக கூட்டணிக்குள் உள்ளது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதி வேண்டும் என்று கேட்கின்றனர், திருமாவளவன் கேட்கின்றார், மேலும் சில கட்சிகள் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கூறுகின்றனர். அந்தக் கட்சிகள் எதிர்பார்ப்பது ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் இது நடந்தால் தான் கூட்டணியில் இருப்போம் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இந்துத்துவாவை அடிப்படையாக வைத்து நடத்தக்கூடிய கட்சி தான் பாஜக. அதனால் தேர்தல் நேரத்தில் இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காக முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். இதை வாக்குக்காக ஒரு கருவியாக நடத்துகின்றனர். முருகனை வழிபடுபவர்கள் பாஜகவில் மட்டுமில்லை. திமுகவில் உள்ளனர், காங்கிரசில் உள்ளனர், அனைத்து கட்சியிலும் உள்ளனர். முருகன் மாநாடு நடத்தினால் இந்துக்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க போவது கிடையாது, ஓட்டு வங்கியாக மாறும் சூழ்நிலை கிடையாது. முருகன் மாநாட்டால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வரும் என்று நினைப்பது மூடநம்பிக்கை, அவர்கள் முருகனுக்கு மட்டுமல்ல, விநாயகருக்கும் அவர்களது தந்தை சிவனுக்கும் வேண்டுமென்றாலும் மாநாடு நடத்தட்டும்” என்றார்.


